தென்னூல் இலக்கியப்படலம் 

(Tennul ilakkiyappatalam)

1. பாயிரவியல்

1. தெய்வவணக்கமும் செயப்படுபொருளும்

அகம்புறம் எனத்தமிழ் ஆன்றோர் புகன்ற புகழ்மிகு மரபொடு புதிதுபுகுந் திலங்கும் இலக்கிய வழக்கும் புலப்பட நோக்கிச் செந்தமிழ்த் தெய்வத் திருவடி ஏத்தி அறமுதல் நான்கும் திறமுறப் பயக்கும் இலக்கியம் படைத்தற்கு எழுமா ணவர்க்குப் படைப்பிபிலக் கியநெறி பசுருவன் இனிதே.


2. இயல்பகுப்பு

பாயிரம் ஈரேழ் திணையிரு கைகோள் சுவையணி மரபொடு யாப்பியல், இயற்பா இசைப்பா உரைப்பா உரைநூல் காப்பியம் புராணம் கதைபொதி பாடல்சிற் றிலக்கியம் பாமாலை சிறுகதை புதினம் நாடகம் கட்டுரை திறனாய்வு ஒப்பியல் ஒழிபென இருபான் நான்கு பகுதித் ததுவே.


3. அவையடக்கம்

அளவறு பரப்புடைக் கலை பிலக் கியத்தின். வளமுழு தறிந்ததை வரைவேனல்லேன் களம்புகு மாணவர் கையே டாக விளம்பினென் விருப்பான் வித்தகச் சான்றோர் உளம்பொறுத் துறுபொருள் விரித்துணர்த்துகவே,


4. இலக்கியத்திற்குரிய இலக்கணப்பயன்

அறிவமை சால்பினர் ஆக்கிய பல்வகை நெறியமை இலக்கியப் பாங்கினை ஓர்தலும் அங்ஙனம் இயற்றலும் அவ்வழிப் புதிய சிந்தனைக்கு உருத்தரும் வடிவொடு செய்ம்முறை செவ்விதிற் காண லும் கோளுணர்ந் துணர்த்தலும் இலக்கியம் பற்றிய இலக்கணப் பயனே,


5. இலக்கியம் இது எனல்

உலகுறை மாந்தர் உள்ளொளி மல்க ஐம்புலத் தின்பம் அறத்தொடு திகழ உணர்வும் சுவையும் அறிவொடு கமழ மன்பதை வாழ்வும் பயனும் விளக்கி இன்பமும் எழுச்சியும் எண்ணத் தமைதியும் எழிலொடு தருவன இலக்கியம் என்ப.


6. அதன் வகை

அதுவே இயற்கையும் செயற்கையும் என இருதிறப்படும்.


7. இயற்கை இலக்கியம்

பரந்தநீ ராழியும் விரிந்தகல் வானமும் நிலவொடு மீனும் உலவுறு வளியும் பல்கதிர்ப் பருதியும் மல்குறு மழையும் ஓங்கிய மலைகளும் ஒழுகுபே ராறும் மலைவீழ் அருளியும் மலர்மலி வாவியும் பூக்கமழ் பொழிலும் நோக்கமை காடும் வண்ணப் பறவையும் வயமா இனங்களும் எண்ணரும் உலகப் பல்லுயிர்ப் பொருள்களும் பண்ணரும் இயற்கைப் பேரிலக் கியமாம். 


8. இயற்கை இலக்கிய பயன்கொள்ளும்முறை

அகவிழி அஞ்செவி அழகியல் உணர்வொடு கற்பனை நோக்குடைக் காவியப் புலவோர் நவையில் சுவைப்புலக் கலைஞர்க் கல்லது இயற்கை இலக்கியப் பயன்கொளற் கரிதே.


9. செயற்கை இலக்கியம்

செயற்கை இலக்கியம் செப்புங் காலை பேசா இலக்கியம் பேசும் இலக்கியம் என இருகூறாய் வனைவுற் றிலங்கும்.


10. பேசா இலக்கியம் 

பேசா இலக்கியம் பிணக்கறு சிற்பம் ஓவியம் அவிநயம் கூத்து கட்டிடம் ஒப்பனை முதலா இயற்றப் படுவன.


11. பேசும் இலக்கியம்

பேசும் இலக்கியம் மாசறு மொழியான் பண்ணொடும் விரவ இயலிசை நாடகர் எனும்முத் திறனாப் பன்னப் படுவன.


12. இருவகைப் பாங்கு

இருவகைப் பாங்கும் மருவியது நாடகம்.


13. ஓசை விகற்பமாய்

ஓசை விகற்பமாய் உணர்வும் மொழியும்

மாசற உள்ளூறுத் தியங்குவது இசைக்கலை, 


14. பேசா இலக்கியம் கவின்கலை 

பேசா இலக்கியம் கவின்கலை 

மற்றது நுண்கலை எனவும் நுவலப் படுமே.


15. நுண்கலை இலக்கியம்

நுண்கலை இலக்கியம் நுவலுங் காலை உணர்வியல் அறிவியல் மெய்யியல் எனமுத் திறப்படும் அவற்றுள் முன்னது அகப்பொருள் பின்னவை புறப்பொருள் என்னும் தமிழ்நூல்.


16. உணர்வியல்

காதல் களித்தல் ஓதல் உடற்றல் ஈதல் ஏற்றல் இசைத்தல் உவத்தல் தொண்டியற் றல்புவிப் பற்றறல் இன்னன உளவியல் சார்ந்த உணர்விய லென்ப.


17. அறிவியல்

வானியல் கோளியல் புவியியல் உடலியல் கணக்கியல் இயற்பியல் உழவியல் போரியல் பொருளியல் மருந்தியல் கருவி இயலொடு அரசியல் போன்றவை அறிவியல் பாற்படும்.


18. மெய்யியல்

உலகுயிரி யாவையும் படைத்தல் காத்தல் மறைத்தல் அழித்தல் அருளல்என் றைந்தொழிற்கு உரியசெம் பொருளொடு உலகுஉயிர் தளை நிலை பாடுபெற ஆய்ந்து வீடுபெறு நிலைமுதல் உரைப்பது மெய்யியல் ஆகுமென் றோதுப.


19. படைப்பிலக்கியம்

படைப்பிலக் கியம்அம் மூவகை விரவ நடக்குங் காலை நயப்புறு குறிக்கோட் பொருளான் பெயர்கொடு வழங்கும், அவற்றுள் பயன்படு மாற்றான் காலவெள் ளத்தில் நிலைப்பன நிலையா தனவுமா ருண்டே.

20. நிலைவெறும் இலக்கியம்

கல்வியறி வாற்றல் செல்வம் போலாது மாந்தர்க் கெல்லாம் எக்கா லத்தும் உரியவாம் காதல் உணர்வுஅவர் ஆளுமை நோக்குமன வீறு பிள்ளைப் பாசம் அன்பருள் இரக்கம் அழுக்காறு வெகுளி அன்னபல் பண்பும் குணனும், இன்பம் துன்பம்முத லாய நேர்ச்சியும், மறுமைச் சிந்தையும் பற்றிய நிகழ்வுகள், அவற்றின் மோதலான் எழுமகப் புறப்போ ராட்டம் உய்த்துணர் வகையான் அமையும் தீர்வுகள் சாதி சமய இனமொழி கடந்த உயர்ந்த குறிக்கோள், உளவியற் பாங்கினை விளக்கும் நிகழ்வுகள் அறிவியற் கொப்ப அமைந்து கற்பனை கலைவளம் பொலியப் பயில்தொறும் சொற்பொருள் நயம்பல விரியும் எளிய இனிய நன்னடை யாப்பின் அவ்வக் காலத் தேவைகட் குரிய கருத்து விரித்தற்கு ஏற்புடைத்தாக எண்ணிய சுவையெலாம் 'நுண்ணிதின் விரிய எடுத்துக் காட்டுதற் கினியபல் தொடர்கள் மடுத்து மக்களின் வாழ்க்கைஎதி ரொலியாய்க் கற்பனைப் படைப்பினர் புராணவர லாற்றினர் யாவ ராயினும் இலக்கிய மாந்தர் மானுடப் பண்பின் வடிவின ராக மனங்கொளும் வண்ணம் புனையும் இலக்கியம் நிலைபே றுடைய தாகும் என்ப.