பத்தாம் வகுப்பு
மனப்பாடப் பகுதி-1
1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடிய - அன்னை மொழியே - அழகார்ந்த செந்தமிழே!
2. நப்பூதனாரின் - முல்லைப்பாட்டு
3. அதிவீரராம பாண்டியரின் - காசிக்காண்டம்
4. குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி
5. கா.ப. செய்குதம்பிப் பாவலர் பாடிய - நீதி வெண்பா
6. பரஞ்சோதி முனிவர் பாடிய- திருவிளையாடற் புராணம்
7. குமரகுருபரர் பாடிய - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
அன்னை மொழியே -
அழகார்ந்த செந்தமிழே!
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
முல்லைப்பாட்டு
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய
உய்த்தர கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்" என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
- நப்பூதனார்
காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
-அதிவீரராம பாண்டியர்
பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.
-குலசேகராழ்வார்
நீதி வெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
-கா.ப. செய்குதம்பிப் பாவலர்
திருவிளையாடற் புராணம்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
-பரஞ்சோதி முனிவர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞாணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட
நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
- குமரகுருபரர்
0 Comments