கலை
10 வகுப்பு தமிழ்
உரைநடை உலகம்
நிகழ்கலை
10 th tamil
Urainatai Ulakam Nikalkalai
Bright Zoom Tamil,
நுழையும்முன்
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் தருவன; கருத்துடன் கலைத்திறனை நோக்காகக்கொண்டு காலவெள்ளத்தைக் கடந்து நிற்பன; ஆடல், பாடல், இசை, நடிப்பு,ஒப்பனை,உரையாடல் வழியாக மக்களை மகிழ்வடையச் செய்வன;சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவன; நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக இருப்பன. அவை யாவை? அவைதாம் மக்கள் பண்பாட்டின் பதிவுகளான நிகழ்கலைகள்.
நிகழ்கலை
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணைசெய்கின்றன.
கரகாட்டம்
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். 'கரகம்' என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம். இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும் படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர். கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர். இதற்கு நையாண்டி மேள இசையும் நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
"நீரற வறியாக் கரகத்து" (புறம்.1) என்ற புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் 'குடக்கூத்து' என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது. இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
மயிலாட்டம்
மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
காவடியாட்டம்
கா - என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள். இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம். மரத்தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி, மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர். அந்த அரைவட்டப்பகுதியைப் பட்டுத்துணியால் மூடி அழகுபடுத்துகின்றனர். மேலும் மயிலிறகுக் கற்றைகளை இருபுறமும் பொருத்தி, மணிகளால் அழகுபடுத்திக் காவடியை உருவாக்குகின்றனர். காவடியின் அமைப்புக்கேற்ப மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று அவற்றை அழைக்கின்றனர். இலங்கை, மலேசியா உட்பட, புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
ஒயிலாட்டம்
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம். உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும் சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும். இதில் கம்பீரத்துடன் ஆடுதல் என்பது தனிச்சிறப்பானது.
ஒயிலாட்டத்தை இருவரிசையாக நின்றும் ஆடுகின்றனர். ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும் இந்த ஒயிலாட்டத்தைப் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது. ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு. இந்த ஆட்டத்தில் தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தேவராட்டம், சேர்வையாட்டம்
தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படு கிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் 'தேவதுந்துபி', தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி. இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது. தேவராட்டம் குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது.
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம். ஆட்டக்கலைஞர்கள் சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா ஆகிய இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டே ஆடுகின்றனர். இதனை இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
பொய்க்கால் குதிரையாட்டம்
"போலச் செய்தல்" பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்று கொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்ட புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. இது இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
தப்பு ஆட்டம்
'தப்பு' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது. இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில் தப்பாட்டம் ஆடப்படுகின்றது. 'தப் தப்' என்று ஒலிப்பதால், அந்த ஒலியின் அடியாகத் 'தப்பு' எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
“தகக தகதகக தந்தத்த தந்தகக
என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”
திருப்புகழ், 143
என்று அருணகிரிநாதர், தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார். இதனைப் 'பறை' என்றும் அழைப்பர்.
ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை. தொல்காப்பியம் குறிப் பி டும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது. மேலும் பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப அதன் இசைப்பு முறைகளும் ஆட்ட முறைகளும் வேறுபடுகின்றன. வட்டமாக ஆடுதல், இரண்டு வரிசையாக எதிர் எதிர்த் திசையில் நின்று ஆடுதல், அனைவரும் நேர் வரிசையில் நின்று ஆடுதல், குதித்துக் குதித்து ஆடுதல், உட்கார்ந்து எழுதல், நடையாட்டம் ஆகிய ஆட்டக் கூறுகளை இன்றைய கலைஞர்களிடம் காணமுடிகின்றது. தப்பாட்டத்தில் கலைஞர்கள் குழுவாகப் பங்கேற்கின்றனர்.
புலி ஆட்டம்
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும். பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று. விழாக்களில் புலி வேடமிடுவோர் உடம்பெங்கும் புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக்கோடுகளையிட்டுத் துணியாலான வாலை இடுப்பில் கட்டிக் கொள்வர். தப்பு மேளத்திற்கேற்ப ஒருவரோ, இருவரோ ஆடுவர். புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும் நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை வெளிப்படுத்துகின்றனர்.
தெருக்கூத்து
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது.
திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. களத்து மேடுகளில் நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து, தெருச் சந்திப்புகளிலும் நிகழ்த்தப்படுகிறது; பின்னர்க் கோவில் சார்ந்த கலையாகவும் ஆக்கப்பட்டது. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. கூத்துக்கலைஞர், கூத்தைக் கற்றுக்கொடுப்பவர் ஆகியோரின் அடிப்படையிலும் காலம், இடம் போன்றவற்றின் அடிப்படையிலும் கூத்து நிகழ்த்தப்படுவதில் சிறுசிறு மாறுபாடுகள் உள்ளன. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யார் இவர்?
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர். "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர். இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புது விதமான நாடகங்களை உருவாக்கியவர். அதே வேளையில் நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர்.
இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
இவர்தான் கூத்துப்பட்டறை ந. முத்துசாமி என்ற கலைஞாயிறு.
தோற்பாவைக் கூத்து
தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து. தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது. இதில் இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன. கூத்து நிகழ்த்தும் திரைச்சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. திருக்குறளில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்பக் கலையாகத் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன; உழைப்பாளிகளின் உணர்வுகளாக உள்ளன; மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
எத்திசையும் புகழ் மணக்க...
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், 'இராச சோழன் தெரு' என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்
கற்பவை கற்றபின்....
1. நீங்கள் அறிந்த நிகழ்கலைகளைத் தனியாகவோ, குழுவாகவோ வகுப்பறையில் நிகழ்த்துக.
2. நீங்கள் வாழும் பகுதியிலுள்ள நிகழ்கலைக் கலைஞர்களை நேர்முகம் கண்டு, அவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Keywords :
கலை,10 வகுப்பு தமிழ்,உரைநடை உலகம்,நிகழ்கலை,10 th tamil ,Urainatai Ulakam Nikalkalai,Bright Zoom Tamil,நுழையும்முன்,கரகாட்டம்,மயிலாட்டம்,காவடியாட்டம்,ஒயிலாட்டம்,தேவராட்டம், சேர்வையாட்டம்,பொய்க்கால் குதிரையாட்டம்,தப்பு ஆட்டம்,புலி ஆட்டம்,தெருக்கூத்து,யார் இவர்?,தோற்பாவைக்கூத்து,எத்திசையும் புகழ் மணக்க,கற்பவை கற்றபின்,
0 Comments